பெட்டாலிங் ஜெயா, ஆக.30-
சஞ்சிகை ஒன்றை வெளியிடுவதற்காகத் தங்கள் தரப்பினர் நன்கொடை வசூல் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் (எம்பிபிஜே) மறுத்தது.
மருந்தக துணை அதிகாரியின் குரல் எனும் தலைப்பிலான சஞ்சிகை ஒன்றை வெளியிடுவதற்காக தங்கள் தரப்பு எந்த ஒரு தனிநபரையும் மன்றத்தின் சார்பில் நன்கொடை வசூல் செய்யும் பிரதிநிதியாக நியமிக்கவில்லை என்று எம்பிபிஜே தொடர்புப் பிரிவின் ஊடக செயலகம் கூறியது.
மாநகராட்சி மன்ற அமலாக்க அதிகாரிபோல் உடையணிந்த பெண்மணி ஒருவர் சம்பந்தப்பட்ட சஞ்சிகையை வெளியிடுவதற்காக மாநகராட்சி மன்றத்தின் பேரில் நிதி வசூலில் ஈடுபட்டதாக பொது மக்கள் சிலர் தங்களிடம் புகார் செய்ததாக அவர் சொன்னார்.
இது போன்றதொரு சஞ்சிகையை மாநகராட்சி மன்றம் வெளியிடவில்லை என்பதோடு நன்கொடை வசூலிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.


