கோலாலம்பூர், ஆக.28-
வெளிநாட்டு விசா முறை தொடர்பாக 4.24 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான கையூட்டைப் பெற்றதாக முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஸாஹிட் ஹமிடி மீதான வழக்கு ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி அரசு தரப்பு தொடுத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
1948ஆம் ஆண்டு கீழ்நிலை நீதிமன்ற சட்டத்தின் 408 பிரிவை மேற்கோள்காட்டி செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தாம் தவறேதும் கண்டுபிடிக்க இயலவில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதி முகமது நஸியான் முகமது கசாலி கூறினார்.
7 குற்றச்சாட்டுகளைக் கொண்ட இவ்வழக்கை ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றிய தீர்ப்பில் சட்ட மீறல் நடவடிக்கை அல்லது தவறான சட்டம் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் அரசு தரப்பின் மனுவில் தெரிவிக்கப்படவில்லை என்றார் அவர். மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் தாம் அம்மனுவை நிராகரித்ததாக அவர் சொன்னார்..


