தெமெர்லோ, ஆக.12-
கடந்த வெள்ளிக்கிழமை பெய்த லெக்கிமா புயல் மழையால் சேதமடைந்த பள்ளிகள் மற்றும் கல்வி கழகங்களின் மறுசீரமைப்புப் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சு தெரிவித்தது.
அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக தனது அமைச்சு கல்வி அமைச்சின் அறிக்கைகாக காத்திருப்பதாக துணை அமைச்சர் முகமது அனுவார் முகமது தாஹிர் கூறினார்.
“எனவே, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு ஏதுவாக பாதிப்படைந்த பள்ளிகள் அவற்றின் சேதம் குறித்து மாவட்ட கல்வி இலாகாவிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் பின்னர் அத்தகவல் கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும்” என்றும் அவர் சொன்னார்.
“இதனிடையே, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு பொறியலாளர்களை அனுப்பி சேதங்களை மதிப்பிடச் செய்யவுள்ளோம். அதன்வழி தேவையான ஒதுக்கீட்டை கோரி, உடனடியாக சீரமைப்பு நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட முடியும்” என்றார்.


