புத்ராஜெயா, ஜூலை 25-
அரசாங்கத்தின் கொள்கை அல்லது திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்கம், தெளிவு மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்த தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு கடப்பாடு கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
வாழ்க்கைச் செலவின உதவித் திட்டம் (பிஎஸ்எச்), பி40 பிரிவினருக்கான தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் பி 40 பிரிவினருக்கான சுகாதார அக்கறை (பெடூலி) திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்த விளக்கமளிப்பு கருத்தரங்கைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அதன் தலைமை செயலாளர் டத்தோ சூரியானி அகமது தெரிவித்தார்.
இவை தவிர்த்து, தாபோங் ஹாஜி விவகாரம், பெல்டா மறு சீரமைப்புத் திட்டம், ஆள் கடத்தல் குற்றச்செயல், கள்ளக் குடியேறிகள் விவகாரம் மற்று இணைய குற்றச்செயல்கள் ஆகியவை குறித்து பல்வேறு விளக்கக் கூட்டங்களை அமைச்சின் வியூகத் தொடர்பு பிரிவு நடத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.
“விவேக ஒத்துழைப்பு, தகவல் பகிர்வு மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம் அரசாங்கத்தின் தகவல்களைத் தெரிவிக்கும் முகவர்களாக செயலாற்றும் அமைச்சின் பணியாளர்கள் தங்கள் பணிகளை நேர்த்தியாகவும் பயனான முறையிலும் செயலாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்” என்றார் அவர்.


