NATIONAL

அன்வார்: லத்தீஃபாவை தனது கடமைகளை ஆற்ற வாய்ப்பு கொடுக்க வேண்டும்

11 ஜூன் 2019, 4:46 AM
அன்வார்: லத்தீஃபாவை தனது கடமைகளை ஆற்ற வாய்ப்பு கொடுக்க வேண்டும்

கோலாலம்பூர், ஜூன் 10:

பிரதமர் துன் மகாதீரின் முடிவை ஏற்று, ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக லத்தீஃபா கோயாவை அவரது கடமைகளை ஆற்ற வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் அனைத்துத் தரப்புகளுக்கும் பிகேஆர் கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம் அறைகூவல் விடுத்துள்ளார்.

மகாதீரின் தீடீர் நியமனம் பாக்காத்தான்  கூட்டணி தரப்பிலிருந்தும், அரசு சார்பற்ற இயக்கங்களிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளதைச் சுட்டிக் காட்டிய அன்வார், இவையனைத்தும் பாக்காத்தான்  கூட்டணி அரசாங்கத்தின் மீதான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றார்.

“எனினும் மகாதீரும், பாக்காத்தான்  கூட்டணி தலைமைத்துவமும் தொடர்ந்து எல்லா கருத்துகளையும் சீர்தூக்கிப் பார்த்து, அமைச்சரவைக்கும், கூட்டணியின் தலைவர்களின் மன்றத்திற்கும் உரிய விளக்கத்தை அளிப்பார்கள்” என தாம் நம்பிக்கைக் கொண்டிருப்பதாகும் அன்வார் மேலும் தெரிவித்தார்.

இதன் மூலம் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கத்தின் கடப்பாடு மேலும் அதிகரிக்கும் நன்மையும் விளைந்துள்ளதாக அன்வார் குறிப்பிட்டார். நேற்று மலாக்காவில் மகாதீர் அரசு ஊழியர்களிடையே உரையாற்றும்போது அவர்கள் அரசியல் கட்சிகளோடு ஆழமான தொடர்புகளை வைத்திருக்கக் கூடாது என்றும் நடுநிலையோடு பணியாற்ற வேண்டும் என்றும் மகாதீர் விடுத்திருக்கும் வேண்டுகோளையும் அன்வார் சுட்டிக் காட்டினார்.

“முந்தைய அரசாங்கம், இன்றைய அரசாங்கம் என அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளையும் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க வேண்டும். பாக்காத்தான் கூட்டணி, அரசு சார்பற்ற இயக்கங்கள், பொதுமக்கள் என அனைவரும் அந்த ஆணையத்தின் வளர்ச்சியையும், செயலாற்றலையும் உன்னிப்பாகக் கவனித்து வருவர்” என்றும் அன்வார் கூறியிருக்கிறார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.