ஷா ஆலம், மே 7
கிள்ளானில் ஒரு பகுதி மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் விநியோகப் பிரச்னைக்கு காரணமான மூன்று முக்கிய குழாய்களைப் பழுது பார்க்கும் பணியை விரைவுபடுத்தும்படி குடிநீர், நிலம் மற்றும் இயற்கை வள துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் உத்தரவிட்டார்.
குழாய் பழுது பார்க்கும் பணி நிறைவடைந்து விட்டதோடு விநியோகம் செய்ய தயாராகிவிட்ட நிலையில், நேற்றிரவு ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக புதிய பழுதுகள் ஏற்பட்டுள்ளன என்றார் அவர்.
‘குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்ப ஆயர் சிலாங்கூர் முயன்று வருகிறது. பழுதடைந்த மூன்று குழாய்களும் முக்கிய குழாய்களாக உள்ளன’ என்றார்.
‘மேற்கு கரை நெடுஞ்சாலை மேம்பாட்டாளர்கள் எழுப்பிய புதிய தடுப்புச் சுவர் இடிந்ததன் காரணமாக பழுது பார்க்கும் பணி சிரமமானதோடு அபாயகரமானதாகவும் உள்ளது. மேலும் ஒரு நில அதிர்வு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன’ என்று அறிக்கை ஒன்றின் வழி சேவியர் குறிப்பிட்டார்.


