NATIONAL

நாட்டின் நிர்வாக முறையை சீரமைக்க ஊழலுக்கு எதிராக அரசு போராடும்

7 மே 2019, 2:56 AM
நாட்டின் நிர்வாக முறையை சீரமைக்க ஊழலுக்கு எதிராக அரசு போராடும்

கோலாலம்பூர், மே 7:

நாட்டின் நிர்வாக முறையை மறுசீரமைப்பு செய்யவும் ஊழலைத் துடைத்தொழிக்கவும் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் கடந்த ஓராண்டு காலமாக கடுமையாகப் போராடி வருகிறது. சில ஆக்கப்பூர்வ பலன்களையும் இதன் வழி காண முடிகிறது..

முந்தைய அரசாங்கம் விட்டுச் சென்ற ‘ஊழல் மலிந்த நாடு’ என்ற தோற்றத்தை நடப்பு அரசாங்கம் களைந்துள்ளதை நாடு கண்ணுற்றது. ஊழல் குறியீட்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள 180 நாடுகளில் 62ஆவது இடத்திலிருந்து 61ஆவது இடத்திற்கு நாடு முன்னேறி இருப்பதே இதற்கு ஒரு சான்றாகும்.

கடந்தாண்டு மே 9ஆம் தேதி நாட்டின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன் நாட்டின் நிர்வாக முறையைத் தூய்மைப்படுத்தும் பணியில் பக்காத்தான் அரசாங்கம் ஈடுபட்டதன் விளைவாக, அதிகார துஷ்பிரயோகம், நிர்வாக முறைகேடு குற்றங்களுக்காக 1எம்டிபி வழக்கின் தொடர்பாக முந்தைய அரசாங்கத்தின் தலைவர்கள் பலர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

இவ்வாண்டு தொடக்கத்தில் உலக ஊழல் எதிர்ப்பு நாளன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்ட ஆய்வில் பங்கேற்றவர்களில் 82 விழுக்காட்டினர் மலேசியாவில் ஊழலும் அதிகாரத் துஷ்பிரயோகமும் கவலையளிக்கும் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஊழல் நடவடிக்கைகளைத் துடைத்தொழிக்க, கடந்த ஜனவரி மாதம் 2019-2013 தேசிய ஊழல் எதிர்ப்புத் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியது. இதன் வழி ஊழலற்ற நாடாக மலேசியாவை உருவாக்கும் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற அரசாங்கம் முனைப்பு காட்டுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.