ஷா ஆலம், ஏப்.3-
மாநிலத்தின் ஏழு பகுதிகளில் 133 மகளிர் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிகளை சிலாங்கூர் மகளிர் மேம்பாடு கழகம் (ஐடபள்யூபி) நடத்தவுள்ளது.
முதல் கட்டமாக இதன் முதல் நிகழ்ச்சி கடந்த மார்ச் 30ஆம் தேதி கோலசிலாங்கூரில் நடைபெற்றது. அதை தொடர்ந்து டெங்கில், காப்பார், கோலலங்காட் ஆகிய பகுதிகளும் சிலாங்கூரில் உள்ள 3 பெல்டா குடியேற்றப் பகுதிகளிலும் இந்நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக அதன் நிர்வாக தலைவர் சித்தி கமாரியா அகமது சுப்கி தெரிவித்தார்.
சமூக விழிப்புணர்வு மற்றும் கல்வி மூலம் புறநகர் பகுதிகளில் வாழும் மகளிருக்கு தன்னம்பிக்கை மற்றும் தொழிதிறனாற்றலை மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும் என்று சித்தி விளக்கினார்.
“சுகாதாரம், குடும்ப நிதி நிர்வாகம், காமத் தொல்லை, குடும்ப வன்முறை, சிறார் பாதுகாப்பு ஆகியவை உட்பட 7 விவகாரங்கள் மீதும் நாங்கள் கவனம் செலுத்தவிருக்கிறோம்” என்றார் அவர்.


