கோலாலம்பூர், மார்ச் 28-
அண்மையில் பந்தாய் பாரு பேருந்து நிலையத்தில், மலாயா பல்கலைக்கழக மாணவர்களிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டார் என்ற புகாரின் பேரில் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் டத்தோ லோக்மான் நூர் அடாம் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
அவரோடு பெட்டாலிங் ஜெயா அம்னோ டிவிஷன் தலைவர் டத்தோ முத்தாலிஃப் அப்துல் ரஹிம் மற்றும் இரு ஆடவர்கள் மீதும் இதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக டத்தோ லோக்மான் உறுதிப்படுத்தினார்.
பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு காயம் விளைவித்ததற்காக குற்றவியல் சட்டத்தின் 323, 149 பிரிவுகளின் கீழ் இந்நால்வரும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
முன்னதாக, அந்தப் பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள உணவகம் ஒன்றில் தமது ஆதரவாளர்களிடம் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுலோக பதாகைகளை ஏந்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது அவரது ஆதரவாளர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து 12 புகார்கள் பெறப்பட்டதாக போலீசார் கூறினர்.


