ஸ்ரீ கெம்பாங்கான், மார்ச் 11:
ஸ்ரீ கெம்பாங்கான் வட்டார பொது மக்கள் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் முயற்சியால் இலவச ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவையின் வழி தங்களது மருத்துவ சிகிச்சைக்கு செர்டாங் மருத்துவமனைக்கு செல்ல ஏதுவாக இருக்கும் என்று சிலாங்கூர் மாநில ஊராட்சித்துறை , பொது போக்குவரத்து மற்றும் புதிய கிராம மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் எங் ஸீ ஹான் தெரிவித்தார்.
" இதற்கு முன், ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவை செர்டாங் மருத்துவமனைக்கு இருந்தாலும் சில இடங்களில் இருந்து வரும் பொது மக்கள் சிரமங்களை சந்தித்து உள்ளனர்.

" பரிவுமிக்க சிலாங்கூர் மாநில அரசாங்கம் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு தாமான் எக்குயின் வீடமைப்பு பகுதிகளில் இருந்து செர்டாங் செல்ல புதிய வழியை ஏற்படுத்தி உள்ளது," என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சுபாங் ஜேயா நகராண்மைக் கழகத்தின் புதிய ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பேருந்து சேவையின் அறிமுக விழாவில் இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் எம்பிஎஸ்ஜேவின் துணைத் தலைவர் முகமட் ஸுல்கார்னாயின் சே அலி, ஸ்ரீ கேம்பாங்கான் சட்ட மன்ற உறுப்பினர் இயான் யோங் இயான் வா மற்றும் ராப்பீட் பேருந்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி முகமட் யாஸுரின் சாலி முகமட் யாசீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


