NATIONAL

கோயிலில் நடந்த கலவரத்தில் அறுவர், இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்

24 டிசம்பர் 2018, 9:32 AM
கோயிலில் நடந்த கலவரத்தில்  அறுவர், இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 24:

கடந்த மாதம், சுபாங் ஜெயா, யு.எஸ்.ஜே. 25, ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அறுவர், இன்று பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

முகமட் ஷாரில் டேனியல் சாஜெல், 22, முகமட் சைபுல்லா அப்துல்லா, 31, முகமட் ஹஸ்னீஜாம் ஷா, 29, அக்மால் இஸ்ஸாட் அஸிஸ், 24 மற்றும் முகமட் நோருல் இஸ்மாவி இஸ்லாஹுட்டின், 40, ஆகிய ஐவரும், செக்‌ஷன் 148, குற்றவியல் பிரிவு (சட்டம் 574) கீழ், கலவரத்தின் போது ஆயுதமேந்தி இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதிபதி முஹமட் இக்வான் முகமது நசீர் முன்னிலையில், இன்று நீதிமன்றத்தில் குற்றம் வாசிக்கப்பட்டபோது, அவர்கள் அனைவரும் குற்றத்தை மறுத்து, விசாரணைக் கோரினர்.

இதற்கிடையே, மலேசிய இந்தியர் கழகத் தலைவர், எம் மணிமாறன், 38, அதே கலவரம் தொடர்பில், வெவ்வேறு மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

முதல் குற்றப்பதிவில், குற்றவியல் சட்டம் 186-வது பிரிவின் கீழ், அரசாங்கப் பணியாளர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் இருந்து தடுக்கப்பட்டதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அடுத்ததாக, கோயிலில் இருந்து வெளியேற முற்பட்ட காவல் துறையினரின் கார்களைத் தடுக்கும் நோக்குடன் கலவரத்தில் ஈடுபட்டதற்காக, குற்றவியல் சட்டப்பிரிவு 147-ஐயும் அவர் எதிர்கொள்கிறார்.

மூன்றாவது குற்றப்பதிவில், செக்‌ஷன் 325 குற்றவியல் பிரிவின் கீழ், சுலைமான் அப்துல்லா, 32, எனும் ஆடவருக்கு, வேண்டுமென்றேக் கடுமையான காயம் ஏற்படுத்தியதற்காக மணிமாறன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

மணிமாறன் தனக்கெதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து, விசாரணைக் கோரியுள்ளார்.

அடுத்தாண்டு, ஜனவரி 17-ம் தேதிக்கு, வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

#மலேசியா இன்று

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.