ஷா ஆலம், ஜூலை 10:
சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியினர் எதிர் வரும் சுங்கை கன்டிஸ் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அடையாளம் கண்டுள்ளதாக சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இன்று நடைபெறும் மாநில அரசியல் பிரிவு கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் தொடர்பில் பேசப்படுகிறது என்று அஸ்மின் அலி தெரிவித்தார்.
" சில வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டு சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் அரசியல் பிரிவு கூட்டத்தில் விவாதிக்கப்படும். இதன் அடிப்படையில் சிறந்த வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கெஅடிலான் தலைமைத்துவத்திற்கு அனுப்பி வைக்கப்படும். சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி உடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டேன். கெஅடிலான் கட்சியின் மாநில எந்திரங்கள் சுங்கை கன்டிஸ் இடைத்தேர்தலை முன்னிட்டு முடுக்கிவிடப்பட்டுள்ளது," என்று மந்திரி பெசார் பெருநிறுவனம் (எம்பிஐ) ஏற்பாடு செய்த நோன்பு பெருநாள் திறந்த இல்ல விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
மறைந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சுஹாய்மி ஷாபியின் சிறந்த மக்கள் சேவையை அடிப்படையாகக் கொண்டு எதிர் வரும் இடைத்தேர்தலில் கெஅடிலான் மகத்தான வெற்றியை பதிவு செய்யும் என்று உறுதி அளித்தார் .


