கோலாலம்பூர்,ஜூலை04;
இன்று காலை கோலாலம்பூர் உயர்நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட நாட்டின் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவருக்கு விதிக்கப்பட்ட ஜாமின் தொகையை செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டார். முன்னதாக அவருக்கு 10 மில்லியன் ஜாமின் தொகையோடு இரு தனிநபர் உத்தரவாதமும் கோரப்பட்ட நிலையில் நஜிப் தரப்பு வழக்கறிஞர்களின் கோரிக்கைக்கு பின்னர் ஜாமின் தொகையில் ஒருபகுதியான வெ.500,000ஐ இன்று செலுத்திய பின்னர் மீததொகை வரும் திங்களன்று செலுத்துவதற்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. நஜிப்பிற்கு விதிக்கப்பட்ட ஜாமின் தொகையை செலுத்தியதோடு அவரது இரு மகன்கள் அவருக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தனர்.
ஜாமின் தொகையை செலுத்தும் நடவடிக்கை சுமார் பிற்பகல் மணி 2.45 அளவில் நிறைவுற்ற வேளையில் நீதிமன்ற வளாகத்திலிருந்து நஜிப் 3.30 மணிக்கு வெளியேறினார். அவரோடு அவரது வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் சாஃபி அப்துல்லாவும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும்,நஜிப் ரசாக்கின் இரு அனைத்துலக கடைப்பிதழும் இன்றும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி 2018ஐ இவ்வழக்கின் செயல்பாடுகளை மேற்கொள்ளும் நாளாக நீதிமன்றம் அறிவித்த வேளையில் 2019ஆம் ஆண்டில் பிப்ரவரி 18 முதல் 28வரை,மார்ச் 4 முதல் 8ஆம் தேதி வரை மற்றும் 11 முதல் 15ஆம் தேதி மார்ச் வரை வழக்கை செவிமடுக்கும் நாளாகவும் நீதிபதி உறுதி செய்தார்.
முன்னதாக நஜிப்க்கு எதிராக வாசிக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளையும் நஜிப் துன் ரசாக் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் மீது மூன்று நம்பிக்கை மோசடி வழக்கும் ஒரு ஊழல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


