ஷா ஆலாம், ஜூன் 25:
அமானா நெகாரா கட்சியினர், அம்னோவின் வீழ்ச்சியை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதன் தலைவர் முகமட் சாபு கூறினார். அம்னோவின் தலைவர்கள் பண அரசியலில் மூழ்கி மலாய் இன கட்சியின் படுதோல்விக்கு இட்டுச் சென்றனர் என்பதை முகமட் சாபு வலியுறுத்தினார்.
" நம்மிடம் பணம் இல்லை, ஆகவே வெற்றி அடைந்தோம். அம்னோ பணம் இருந்ததால் தோல்வி அடைந்தனர். நாம் இப்போது அரசாங்க நிர்வாகத்தை வழிநடத்துகிறோம், ஆகவே நாம் அவர்களை போல் ஆகக்கூடாது. அம்னோவின் வீழ்ச்சியை நாம் சிறந்த ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்," என்று ஷா ஆலம் அரங்கத்தில் நடைபெற்ற அமானா கட்சியின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி, ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இஸாம் ஹாசிம், ஹானிஸா தால்ஹா மற்றும் டத்தோ அப்துல் ரஷீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.


