புத்ரா ஜெயா, ஜூன் 15:
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஏற்பாடு செய்த நோன்பு பெருநாள் திறந்த இல்ல விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் 50,000-க்கும் மேற்பட்ட வருகையாளர்கள் கலந்து கொண்டனர். பெர்டானா மையத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த விருந்துபசரிப்பு மிக விமரிசையாக நடைபெற்றது. பல அமைச்சர்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதில் பொருளாதார விவகார அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி முதலாவதாக வந்து கலந்து கொண்டார்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான அஸ்மின் அலி மேன்மை தங்கிய சிலாங்கூர் மன்னர் சுல்தான் ஷாராஃபூடின் இட்ரிஸ் ஷா உடன் சுல்தான் சாலாஹூடின் பள்ளிவாசலில் நோன்பு பெருநாள் தொழுகை முடித்தவுடன் உடனடியாக பிரதமரின் விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அஸ்மின் அலியை தவிர, தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு, உள்துறை பாதுகாப்பு அமைச்சர் டான்ஸ்ரீ முஹிடின் யாசீன், கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக், நிதியமைச்சர் லிம் குவான் எங் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ பூஃக் ஆகியோர் கலந்து கொண்டனர்.


