சுபாங் ஜெயா,ஜூன்13:
இவ்வட்டாரங்களில் அதிகமாக காணப்படும் கைவிடப்பட்ட வாகனங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக கூறிய ஆட்சிக்குழு உறுப்பினர் ங் எஸ்ஷி ஹான் இவற்றை விவேகமாய் கையாள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இம்மாதிரி கைவிடப்பட்டுள்ள வாகனங்கள் கொசுகளின் உற்பத்திக்கு உகர்ந்த இடமாய் உருமாறுவதோடு மட்டுமின்றி சுற்றுச்சூழலின் தோற்றத்திற்கும் எதிர்மறையான சூழலை காட்டுகிறது என்றும் போக்குவரத்து மற்றும் புதுக்கிராம ஆட்சிக்குழு உறுப்பினரான அவர் குறிப்பிட்டார்.
ஊராட்சிதுறைகளுக்கு இது பெரும் தலைவலியாக இருப்பதாக கூறிய அவர் ஊராட்சி மன்றங்களின் கிடங்குகளிலும் இடம் இல்லாத அளவிற்கு கைவிடப்பட்ட வாகனங்கள் அதிகரித்துக் கொண்டே போவதாகவும் கூறிய அவர் இப்பிரச்னை சிலாங்கூர் மாநில முழுவதும் இருப்பதாகவும் கூறினார்.
இது தொடர்பில் நாட்டின் போக்குவரத்து அமைச்சரோடு கலந்து பேசியிருப்பதாகவும் பழைய கார்களை அழிக்கும் நடவடிக்கை குறித்த புதிய சட்டம் ஆய்வு செய்யப்பட வேண்டும் என பரிந்துரைத்திருப்பதாகவும் கூறினார்.
இவ்விவகாரத்தில் அனைத்து தரப்பும் விவேகமாய் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் இம்மாதிரி வாகனங்களால் கொசு உற்பத்தி குறிப்பாக ஏடிஸ் உற்பத்தி அதிகரிப்பதோடு சுற்றுச்சூழலையும் மாசுப்படுத்துவதாகவும் நினைவுறுத்தினார்.
இதற்கு முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் இதுபோன்ற வாகனங்களை அழிக்க மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்ட வேளையில் ஆறு மாதங்களுக்குள் அவற்றை அழித்தல் விவேகம் என்று தனது ஆலோசனையையும் அவர் முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


