ஷா ஆலம், பிப்ரவரி 26:
எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை வெற்றி கொண்டால் இளம் தம்பதியினருக்கு இலவசமாக வீடுகள் வழங்கப்படும் என்ற அம்னோ தேசிய முன்னணியின் தேர்தல் வாக்குறுதி வெறும் வெற்று வாக்குறுதியே என்று கெஅடிலான் கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் ஸூரைடா கமாரூடின் கூறினார். இது சாத்தியமே இல்லை, ஏனெனில் தேசிய முன்னணி ஏற்கனவே சிலாங்கூரில் மக்கள் நலத்திட்டங்கள் அமல்படுத்த தோல்வி அடைந்தது என்று தெரிவித்தார். மேலும் சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜமால் யூனூஸ் நம்பகத்தன்மையற்றவர் என்று விவரித்தார்.

" அவரின் வாக்குறுதியை நம்ப முடியாது. ஜமால் நம்பத்தகுந்த நபர் அல்ல, நேர்மையற்றவர் மற்றும் எந்த ஒரு நிர்வாக அனுபவமும் இல்லாத ஒருவர். கடந்த 60 ஆண்டுகளாக வெற்று வாக்குறுதிகளை தேசிய முன்னணி வழங்கி வந்துள்ளது. இதனால் தேசிய முன்னணி 2008-இல் இருந்து சிலாங்கூரில் தோல்வி அடைந்து வருகிறது," என்று பிஃரி மலேசியா டுடேவிடம் தெரிவித்தார்.
14-வது பொது தேர்தலில் சிலாங்கூரை கைப்பற்றினால் இளம் தம்பதியினருக்கு இலவசமாக வீடுகள் வழங்க தயாராக உள்ளதாக வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதில் அளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.


