ஷா ஆலம், பிப்ரவரி 6:
கின்ராரா சட்ட மன்றத்தில் 30 தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் வசதி குறைந்த மகளிருக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஸ்மார்ட் சிலாங்கூர் அன்புத் தாய் (கீஸ்) அட்டை வழங்கப்பட்டதாக கின்ராரா சட்ட மன்ற உறுப்பினர் எங் ஸி ஹான் கூறினார். பிப்ரவரி மாதம் முதல் கட்டம் கட்டமாக கீஸ் அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
" இது சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்கள் (ஐபிஆர்) மூலம் கின்ராரா சட்ட மன்ற தகுதி பெற்ற தாய்மார்களுக்கு கொடுக்கப் பட்டது. இந்த மாதம் தொடங்கி கீஸ் அட்டைகள் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும்," என்று பூச்சோங் 14-வது மைல் பொது மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கு முன்பு, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கடந்த நவம்பரில் தாக்கல் செய்த 2018-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மகளிர் மேம்பாட்டு திட்டங்களுக்காக ரிம 72 மில்லியனை கீஸ் அட்டைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற தாய்மார்கள் மாதந்தோறும் ரிம 200 அல்லது வருடத்திற்கு ரிம 2400 மதிப்பிலான உணவு பொருட்களை தேர்ந்தெடுக்கப்பட்ட 500 பேரங்காடிகளில் வாங்கிக் கொள்ளலாம். உணவு பொருட்களான அரிசி, சமையல் எண்ணெய், கோதுமை மற்றும் பள்ளி சீருடைகள் போன்றவைகளை கீஸ் அட்டையின் மூலம் மக்கள் பயன் அடைவார்கள்.

கீஸ் அட்டை சிலாங்கூரில் பிறந்தவர்கள் அல்லது 10 வருடங்களுக்கு மேலாக சிலாங்கூர் மாநிலத்தில் வசிக்கும் வாக்காளர்கள் மட்டுமே பயன் பெற முடியும். மேலும் 21 வயது பிள்ளைகளைக் கொண்ட தனித்து வாழும் தாய்மார்கள் அல்லது ரிம 2000-க்கும் குறைவான குடும்ப வருமானம் பெறும் மகளிரும் இத்திட்டத்தின் கீழ் பதிந்துக் கொள்ளலாம்.
தகுதி பெற்ற தாய்மார்கள் அருகாமையில் உள்ள சட்ட மன்ற உறுப்பினரின் அலுவலகம் அல்லது இணைய தளத்தில் www.kiss.com.my பதிந்துக் கொள்ள முடியும்.


