ஷா ஆலம், ஜனவரி 22:
சாமான்ய மக்களை கொள்ளையடிக்கும் அம்னோ தேசிய முன்னணி ஆட்சி, எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் மாற்றப்பட்டால் நாடு முழுமையான மாற்றத்தை காணும் என்று பலாக்கோங் சட்ட மன்ற உறுப்பினர் எங் தியேன் சீ கூறினார்.எதிர்க்கட்சிகள் நாட்டை ஆட்சி செய்தால் நாடு குட்டிச்சுவராகி விடும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதில் அளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். நஜீப்பின் அவதூறு பேச்சு பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் வாக்காளர்களை பயமுறுத்தும் செயலாகும் என்று வன்மையாக சாடினார்.
" பிரதமரின் அறிக்கை உண்மையில்லை மட்டுமில்லாமல் மக்களை கிணற்றுத் தவளைகளாக கேவலப்படுத்தும் செயல். கடந்த 2008-இல் தொடங்கி இன்று வரை பினாங்கு மற்றும் சிலாங்கூர் குட்டிச்சுவராகி விடவில்லை. மாறாக சிறந்த முன்னேற்றம் அடைந்துள்ளது," என்று விவரித்தார்.
இரண்டு மாநிலங்களில் உள்ள மக்கள் நன்கு பயன் பெற்று வருகின்றனர் என்றும் பாக்காத்தான் அம்னோ தேசிய முன்னணி ஆட்சியை விட சிறந்த முறையில் நிர்வாகம் செய்து வருகிறது என்றார். இதன் மூலம் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் வெளியிட்டுள்ள அறிக்கையில் உண்மையில்லை. இந்த நாடு தொடர்ந்து கிலேப்தோகிராட் ஆட்சி செய்தால் மட்டுமே குட்டிச்சுவராகி விடும் என்று கூறினார்.


