RENCANA PILIHAN

ரஜினிகாந்த் அரசியலில் நுழைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1 ஜனவரி 2018, 5:16 AM
ரஜினிகாந்த் அரசியலில் நுழைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரஜினிகாந்த் அரசியலில் நுழைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை, டிசம்பர் 31:

தமிழக சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து இன்று ரசிகர்கள் முன்னிலையில் அறிவித்தார் என்று பிபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் தனது ரசிகர்களை கொண்டுள்ள 67 வயதான ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை உருவாக்க இருப்பதாக ராகவேந்திர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது தெரிவித்தார்.

" தமிழக அரசின் அமைப்பை மாற்றம் செய்யும் காலம் கனிந்து விட்டது. இது எனது கடமை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தது முதல் தமிழக அரசியல் நிலைத்தன்மையின்றி காணப்படுகிறது. அடுத்து வரும் தமிழ்நாட்டு சட்ட மன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் எனது கட்சி போட்டியிடும். இப்போது நான் முடிவு எடுக்கவில்லை என்றால் தமிழக மக்கள் என்னை மன்னிக்க மாட்டார்கள்," என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து நீண்ட காலமாக கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. கடந்த ஆறு நாட்களாக ரசிகர்களை அவர் சந்தித்து பேசி வந்தது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு, ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனிடையே, ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தமிழகத்தின் எதிர்காலம் தமிழர்களால் முடிவு செய்ய வேண்டும் என்று பதிலளித்தார்.

" தமிழ் சினிமாவில் நடித்து நல்வாழ்வு கண்ட ரஜினிகாந்த் தமிழ்நாட்டுக்கு என்ன செய்யப் போகிறார்? எந்த போராட்டத்திற்கு தமிழனுக்கு ஆதரவு குரல் கொடுத்து இருக்கிறார்? காவேரி பிரச்சனை, நெடுவாசல் பிரச்சினை, மீனவர்கள் இறப்பு மற்றும் ஜல்லிக்கட்டு போன்ற தமிழகத்தின் தலையாய பிரச்சனைகளில் ஓடி ஒளிந்து கொண்டவர் ரஜினிகாந்த். இவர் வந்து தமிழ்நாட்டு மக்களுக்கு புதியதாக ஒன்றும் செய்யப் போவதில்லை. ஏழு கோடி தமிழர்களை ஆள நிறைய தமிழ் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை ரஜினிகாந்த் மற்றும் அவரது ரசிகர்கள் உணரும் காலம் கண்டிப்பாக வரும்," என்று கடுமையாக சாடினார்.

#தமிழ் அரசன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.