SUKANKINI

ஹாரிமாவ் மலேசியாவிற்கு நாட்டு மக்களின் ஒருமித்த ஆதரவு

29 ஆகஸ்ட் 2017, 3:27 AM
ஹாரிமாவ் மலேசியாவிற்கு நாட்டு மக்களின் ஒருமித்த ஆதரவு

ஷா ஆலம், ஆகஸ்ட் 29:

2017 கோலா லம்பூர் சீ விளையாட்டு கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற இன்னும் 9 மணி நேரம் உள்ளது. மலேசியா மற்றும் தாய்லாந்து அணிகளிடையே ஆன ஆட்டத்தில் வெற்றி பெற்று தங்கம் எடுத்தால் மட்டுமே சீ விளையாட்டு போட்டியில் 'வென்றதாக அர்த்தம்' என்று இரு அணிகளும் மோதும் ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில், மலேசியா 16 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட தோல்விக்கு வஞ்சம் தீர்க்கும் எண்ணத்தில் இன்று மலேசியா மக்களின் ஒருமித்த ஆதரவோடு களம் இறங்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.

தாய்லாந்து இன்று மலேசியா அணியுடன் மட்டும் விளையாடப் போவதில்லை, மாறாக உபசரணை அணியான ஹாரிமாவ் மலேசியாவின் 70,000 தீவிர ரசிகர்கள் மத்தியில் ஷா ஆலம் அரங்கில் இரவு 8.30 மணிக்கு விளையாட இருக்கிறது. அரையிறுதி ஆட்டத்தில் மியான்மர் அணியை 1-0 கோல் கணக்கில் வீழ்த்தினாலும் ஆட்டத்திறன் குறைந்தே காணப்படுகிறது.

மலேசியா தனது பதக்க இலக்கான 111 தங்கப்பதக்கங்களை நேற்று சைக்கிளோட்ட உலக சாம்பியன் அஸிஸூல் ஹாஸ்னி அவாங் மூலம் பெற்ற போதும் கால்பந்து தங்கப் பதக்கம் அதைவிட முக்கியமானது என்று மலேசியர்கள் அனைவரும் எண்ணம் கொண்டுள்ளனர்.

மலேசியா அணி மீண்டும் தனது கோல் மன்னன் ந.தனபாலனை நம்பி களம் இறங்குகிறது. சீ விளையாட்டு கால்பந்து ஆட்டங்களில் சிறந்த விளையாட்டினை வெளிப்படுத்திய தனபாலன் அரையிறுதி ஆட்டத்தில் இந்தோனேசியாவிற்கு எதிராக மிக சிறந்த கோல் புகுத்தி மலேசியாவை இறுதி ஆட்டத்திற்கு கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சபாஃவி ரஷிட் தனபாலனுடன் முன்னணி ஆட்டக்காரராக களம் இறங்கும் வேளையில், மாத்தீயூ டேவிஸ்  (மத்திய திடல்) மற்றும் நோர் அஸ்லின்  (தற்காப்பு) போன்ற ஆட்டக்காரர்கள் மலேசியா அணியை வெற்றி பாதையில் வழி நடத்திச் செல்வார்கள் என்று 30 மில்லியன் மலேசியர்கள் எதிர் பார்க்கிறார்கள்.

மலேசியர்களாகிய அனைவரும் இறுதி ஆட்டம் நடைபெறும் வேளையில் எங்கு இருந்தாலும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். வீட்டில் இருந்தோ அல்லது 'மாமாக்' உணவகங்களிலோ அல்லது திரை அரங்கிலோ இருந்தாலும் நமது நாட்டு வீரர்களுக்கு  ஆதரவை வெளிப்படுத்த வேண்டும்.

ஷா ஆலம் அரங்கில் கண்டு களிக்கும் கால்பந்து ரசிகர்கள் முதிர்ச்சியாக நடந்துக் கொள்ளுங்கள். 'நமது நாடு நமது  கடமை' என்ற எண்ணம் கொண்டு ஷா ஆலம் அரங்கில் குப்பைகளை வீசாதீர்கள். எதிரணி ரசிகர்கள் உடன் சச்சரவு ஏற்படாத வண்ணம் செயல் படுங்கள். ஆட்டத்தின் முடிவு எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் உலக நாடுகளில் மத்தியில் நற்பெயரை ஏற்படுத்த வேண்டும். 2017 கோலா லம்பூர் சீ விளையாட்டு உபசரணை நாடான மலேசியாவிற்கு களங்கம் ஏற்படாமல் நடந்து கொள்ளுங்கள்.

"வாருங்கள் ஹாரிமாவ் மலேசியா, அனைவரும் இணைந்து போராடுவோம்"

தமிழாக்கம்

கு.குணசேகரன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.