MEDIA STATEMENT

60 வயது போதும் இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்

14 ஏப்ரல் 2017, 11:09 PM
60 வயது போதும் இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்

நாட்டில் இளம் தலைமுறையினர் குறிப்பாக படித்த பட்டதாரிகள் இன்னமும் வேலைக்காக காத்திருக்கும் நிலையில் அரசு ஊழியர்களின் பணி ஓய்வினை 60 வயதிலிருந்து 65 வயதாக உயர்த்த ஆலோசிப்பது அர்த்தமற்றது என கோலா லாங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல்லா சானி கூறினார்.

வேலை இல்லாத பட்டதாரிகளின் எண்ணிக்கை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் இப்பிரச்னை ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத்தில் எழும் போது  அதனை தீர்ப்பதற்கு விவேகமான நடவடிக்கை எடுக்கப்படுவதாக மனித வள அமைச்சும் கூறும்.ஆனால்,நடவடிக்கை என்பது இதுவரை விவேகமற்ற நிலையில் இருப்பதாகவும் அவர் நினைவுக்கூர்ந்தார்.

ஆனால்,இந்நிலையில் பொது சேவைத் துறை ஊழியர்களின் பணி ஓய்வுக்காலத்தை 60 வயதிலிருந்து 65 வயதாக உயர்த்த கியூபெக்ஸ் முன் வைத்திருப்பதாக வெளியாகியிருக்கும்  கோரிக்கை அர்த்தமற்றது என்றார்.

 

இந்த ஆலோசனையானது இளம் தலைமுறையின் சிந்தனைகளையும் அவர்களின் ஆற்றலையும் குழித்தோண்டி புதைத்து விடுவதோடு நாட்டின் நவீனத்துவ மேம்பாட்டையும் வளர்ச்சியையும் அஃது மூடமாக்கும் என்றும் அவர் சாடினார்.

கல்வியல் மற்றும் மருத்துவ ரீதியிலான துறைகளில் அனுபவமும் ஆற்றலுமிக்க 60 வயதை தாண்டியவர்களின் திறன் இன்னமும் தேவைப்படுவதாகவும் கூறிய அவர் இருந்த போதிலும் 60 வயது போதுமானது என்றும் கூறினார்.

இருந்த போதிலும் 60 வயது பணி ஓய்விற்கு பின்னர் தேவையின் நலன் கருதி அவர்களை குத்தகை அடிப்படையில் 65 வயது வரை நீடிப்பதில் தவறில்லை என்றும் கூறிய அவர் பணி ஓய்வு வயதை 60ஆக நிலைநிறுத்துவதே விவேகம் என்றார்.

நாட்டில் வேலையில்லாத பட்டதாரிகளின் எண்ணிக்கை 200,000மாக உயர்ந்திருப்பது நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கு பெரும் பின்னடைவு என்பதை நினைவுறுத்திய அவர் நாட்டின் பொருளாதார சரிவு,ஜிஎஸ்டி உட்பட பல்வேறு பிரச்னைகள் இளம் தலைமுறையினரை அழுத்திக் கொண்டிருக்கும் நிலையில் பிடிபிடிஎன் கடன் தொல்லையோ அவர்களை மேலும் துயரத்தில் மூழ்கடிக்கிறது என்றும் கூறினார்.

 

 

இன்றைய சூழலில் உலக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் ஈடாக தொடர்ந்து மலேசியா புதியதொரு தளம் நோக்கி பயணிக்க இளம் தலைமுறையின்  ஆற்றலும் திறனும் காலத்திற்கு ஏற்ப பெரும் அவசியமாவதாகவும் அவர் நினைவுறுத்தினார்.

இம்மாதிரியான காலத்திற்கு ஒவ்வாத விவேகமற்ற மற்றும் தூர நோக்கு சிந்தனையற்ற கருத்தையும் ஆலோசனையையும் முன் வைப்பதை கியூபெக்ஸ் நன்கு ஆராய வேண்டும் எனவும் டத்தோ அப்துல்லா சானி கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.